Monday, July 23, 2012

திணைமாலை நூற்றைம்பது - பூச் சூடிய எருமை


திணைமாலை நூற்றைம்பது - பூச் சூடிய எருமை

குழந்தைக்கு பூச் சூடி பார்க்கலாம்...

பெண்கள் பூ சூடி பார்த்து இருக்கிறோம்.

எருமை மாடு பூச் சூடி வந்தால் எப்படி இருக்கும் ?

ஒரு பெரிய கரிய எருமை. நீர் நிறைந்த குட்டையை பார்த்தது. அதுக்கு ஒரே குஷி. "ங்கா...." என்று கத்திக்கொண்டு தண்ணிக்குள் பாய்ந்தது.

சுகமாக தண்ணீரில் கிடந்து ஓய்வு எடுத்தது. மாலை நேரம் வந்தது. வீட்டுக்கு கிளம்பியது. அது வெளியே வரும்போது அதன் மேல் கொஞ்சம் சேறு ஒட்டிக் கொண்டது.
இருக்காதா பின்ன...நாள் எல்லாம் குட்டைல கிடந்தா ? 

அந்த சேற்றின் மேல் ஒரு சில மீன்கள் ஒட்டிக் கொண்டு வந்தன. 

அந்த எருமையின் மேல் ஒரு தவளை ஏறி உட்கார்ந்து கொண்டு வந்தது.

கூடவே சில குவளை மலர்களும் ஒட்டிக்கொண்டு வந்தன. 

அடடா...என்ன ஒரு கண் கொள்ளா காட்சி....!

செம்கண் கரும் கோட்டு எருமை, சிறு கனையால்
அம் கண் கழனிப் பழனம் பாய்ந்து-அங்கண்
குவளைஅம் பூவொடு, செம் கயல் மீன் சூடித்
தவளையும் மேல் கொண்டு வரும்.   


செம்கண் = சிவந்த கண்களையும்

கரும் = கரிய நிறமும்

கோட்டு = கொம்புகளையும் கொண்ட

எருமை, = எருமை மாடு

சிறு கனையால் = கனைத்துக் கொண்டு

அம் கண் = அங்கே உள்ள

கழனிப் பழனம் = மருத நிலத்தில் உள்ள கழனியில்

பாய்ந்து- = பாய்ந்து

அங்கண்= அதில் இருந்த

குவளைஅம் பூவொடு = குவளை மலரோடு

செம் கயல் மீன் சூடித் = செம்மையான மீன்களையும்

தவளையும் = ஒரு சில தவளைகளையும்

மேல் கொண்டு வரும்.    = அந்த எருமை மேலே வரும்போது, கூடவே கொண்டு வரும்


1 comment: